Saturday, September 14, 2013

தாயுமானவனுக்காக ஒரு பதிவு.



1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.

2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.

3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.

4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.

5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்.

6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.

7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.


இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.

என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி
தியாகம் செய்த தாயுமானவன்
என் தந்தை!

-ஆதிரா.

Thursday, August 29, 2013

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.




1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள். உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

 உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.


Tuesday, July 23, 2013

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..





1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.

Tuesday, June 25, 2013

தமிழனாய் பிறந்ததென்ன அத்தனை பெரியக் குற்றமா??







அணுகுண்டு வைக்கல
ஆயுதம் ஏந்தல
ஆள் கடத்தலும் செய்யல

உணவுக் கலப்படம் செய்யல
ஊர் சொத்த கொல்லையடிக்கல
ஊழல் செஞ்சும் பிழைக்கல

மது விக்கல மாதுவும் விக்கல
மதக் கலவரமும் செய்யல

பேருந்தைக் கொளுத்தல
மரத்தை வெட்டல
எவனோ உள்ளப் போனதுக்கு
எவன் உயிரையும் நாங்க எடுக்கல

அடிமையா வாழல எவரையும்
அடிமையாக்கவும் முயற்சிக்கல

செய்ததெல்லாம் ஒன்று..


உயிர் வாழ பிழைப்பைத் தேடி
கடலுக்குள் சென்றோம்..
எல்லைத் தாண்டினோம் என
எளிதில் பறிக்கப்பட்டது எங்கள்
உயிர்..


உலகிலேயே இவ்வளவு துச்சமாக அற்பக் காரணம் சொல்லிக் கொல்லப்படும் உயிர் தமிழக மீனவனுடையது மட்டுமே. எல்லை தாண்டினார்கள் சுட்டோம் என்றுச் சொல்லுவதை விட, இலங்கை அரசுக்கு பொழுது போகவில்லை, கடலுக்கு வேட்டைக்கு வந்தோம் என்றுச் சொல்லுங்கள். பொருத்தமாக இருக்கும்.

Sunday, June 23, 2013

எதிர் மறையில் இருக்கும் நேர்மறை தெரிந்தால் எல்லாம் இங்குச் சுகமே !!




அழுவதுக் கூடச் சுகம் தான் 
அழவைத்தவரே அருகில் இருந்து 
சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான் 
காக்கவைத்தவர் அதற்கு தகுதி 
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
பிருந்திருந்த காலம் அன்பை 
இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான் 
சட்டென முடிக்கு கொண்டு வரும் 
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர் 
முகத்தில் புன்னகையை மட்டும் 
வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும் 
அக்கறையையும் மட்டும் 
வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான் 
விவாதத்தை விட உயர்ந்தது உறவு 
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான் 
உண்மையான அன்புக் கொண்ட  நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான் 
முயற்சியின்  தீவிரத்தை இன்னும் 
அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான் 
தவறாமல் தவறிலிருந்து பாடம் 
கற்றுக்  கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான் 
எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத் 
தேடித் தெரிந்து நம்மைத்  தேற்றிக் கொண்டால்...




Saturday, June 1, 2013

வாழ்க்கை அனைத்தையும் கற்றுத் தரும் வாழவும் கற்றுத் தரும்.


இன்று வகுப்பில் இருக்கையில் என் அம்மாவிடம் இருந்து missed cal மேல் missed cal .வகுப்பு முடிந்ததும் , வெளியே வந்து call பண்ணி என்னம்மா என்றால் ,  "  நம்ம பவி  (என் அத்தை  மகள் ) உனக்கு உடனே போன் பண்ண சொல்லி ஒரே தொல்லை".இவ்வளவு நேரம் காத்திருந்து இப்ப தான் வீட்டுக்கு போனான்னு சொன்னாங்க.ஏன் மா ன்னு கேட்டேன்.அவள் 456 மதிப்பெண் எடுத்திருக்கா, இப்ப தான் ரிசல்ட் வந்துச்சு, அவ என்ன படிக்கறதுன்னு இப்பவே உன்னட கேக்கனுமான்னு சொன்னாங்க.சரி மா நான் வீட்டுக்கு போய் பொறுமையா அவ கிட்ட பேசறன்னு சொன்னேன்.நான் என்ன மார்க் எடுத்தேன்னு பவி கேட்டடிருப்பா கண்டிப்பா , அதுக்கு நீ என்னமா பதில் சொன்ன என்றுக் கேட்டேன்.நான் பத்தாவது எழுதி வருடங்கள் பத்தாகி விட்டதால் அம்மா நிச்சயம் மறந்திருப்பார் என்றறிவேன்.


எங்க பவியின் இப்போதைய ஆர்வம் அவள் என்னை விட அதிகம் மார்க் எடுத்திருக்கிறாளா? என்பதை தெரிந்துக் கொள்வது தான்.இந்த உண்மை புரியாத அம்மா ,  தன் பிள்ளையை விட்டுத் தராமல் அவள் (நான்) 466 மதிப்பெண் பெற்றாள் என்றுத்  தவறாக சொல்லி விட்டார்.அவ்வளவு தான் ,எங்க பவியின் அழகிய முகம் சட்டென  எப்படிச் சுருங்கிருக்கும் என்று என்னால் கற்பனைச் செய்ய முடிகிறது.

பவி வந்தால் அவள் என்னை விட இரண்டு மார்க் அதிகம் எடுத்திருக்கிறாள், நான் வாழ்த்துச் சொன்னேன் என்றுச் சொல்லி ஊக்கப் படுத்து மா .அவள் இன்னும் சந்தோசப் படுவாள் என்றுச் சொல்லி முடித்து போனை வைத்தேன்.


மாலை வீடு திரும்பிய பின், எங்க அத்தை வீட்டுக்கு போன் பண்ணி பேசினேன்.பவியை மேற்கொண்டு எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற கேள்விக்கு என்னால் முடிந்த வரை எங்க ஊர் பள்ளிகளை ஆராச்சி செய்து ஆலோசனை மட்டும் சொல்லி, அவர்களை முடிவு செய்து கொள்ளச் சொன்னேன்.நான் ஊரைப் பார்த்து வருடங்கள் பல ஆகுது. எல்லா பள்ளிக் கூடங்களும் நான் பார்த்த நிலைமையில் தான் இருக்கா?இல்லை மாற்றம் உண்டா என்றறியேன்.என்னால் முடிந்த வரை நல்ல ஆலோசனை சொல்ல முயற்சித்தேன்.


பவி லைன்லில் வந்ததும், வாழ்த்துச் சொன்னேன்.பள்ளியில் யாரடி முதலிடம்? வட்டார முதலிடம் (Regional first ) எந்தப் பள்ளிப்  பெற்றிருக்கிறது.அவள் படிக்கும் (அங்கு தான் நானும் படித்தேன் ) பள்ளி முதலிடம் பெறுவது தான் வழக்கம்.முதலிடம் பற்றிய விவரம் அறிவதில் எனக்கு ஆர்வமில்லை.அந்த விவரங்களை பவி அறிந்திருக்கிராளா? என்பதே என் ஆர்வம்.


பவி," அதெல்லாம் யாருக்குத்  தெரியும்.நான் அதுலாம் பாக்கல, யார் வந்தா நமக்கென்ன ? என்றால்.சபாஷ், மிகச் சரியான பதில்.இந்த பதிலை தான் நான் விரும்புகிறேன். ஆக, இவளுக்கு யார் மதிப்பெண் மீதும் ஆர்வமில்லை, என்னைய விட மிஞ்சிட்டமானு மட்டும் செக் பன்னிருக்கான்னு புரிந்தது.


பெற்றோர் பிள்ளைகளுக்கு  அடுத்தவரை ரோல் மாடலாய் காட்டுகிறோம் என்ற பெயரில் அடுத்தவருடன் ஒப்பிடும் விளைவே பிள்ளைகள் தங்களைத் தாங்களே அடுத்தவருடன் ஒப்பிட்டுக் கொள்வது .  என் அத்தைக்கும் மாமாவுக்கும் பவித்ரா என்னை போல் வர வேண்டும் (நான் ஒன்றும் கிழித்து விட வில்லை, என் குடும்பத்தைக்  காக்கும் கடமை எனக்கு தரப்பட்டிருப்பதாக இளவயதிலேயே உணர்ந்தேன். அதற்காக முயற்சிக்கிறேன், அவ்வளவு  தான் ). பொருளாதாரத்தால் நலிவடைந்து இருக்கும் அந்தக் குடும்பத்தையும் பவி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பை அவள் என்னிடம் இருந்து கற்க வேண்டும் என்பதே என் அத்தை மாமாவின் விருப்பம்.ஆனால் அதற்கு அவர்கள் கையாளும் முறை தான் தவறு.



அடிக்கடி என்னை உதாரணம் காட்டுகிறேன் என்ற பெயரில் ஆதி யை போல் வர வேண்டும்,அவளால் தான் நம்ம அத்தை இன்று  சந்தோசமாக இருக்கிறாள், அப்படி இப்படி என அளந்து விடுவது.என்னைக் கண்டாலே 8 வது படிக்கும் என் மாமா பையன் (பவித்ராவின் தம்பி)பேயைப் பார்ப்பது போல் பயந்து ஓடுகிறான்.தொலைபேசியில் கூடப் பேசுவதில்லை.நான் அவன் படிப்பு, மதிப்பெண் என்று கேள்வி கேட்டு அவனை துன்புறுத்துவேன் என்றப்  பயம்.அப்பனா பாத்துகோங்க எந்த அளவுக்கு என்னைய பத்தி பில்ட் அப் பண்ணிருப்பாங்கன்னு. !! 


பவித்ரா என்றும் ஆதிரா ஆக முடியாது , ஆதிரா என்றும் பவித்ரா ஆக முடியாது என்பது தானே நிதர்சனம்.பெற்றோரின் துன்பங்களை பார்த்தே வளரும் பிள்ளைகள் எந்தச் சூழலிலும் பாதை தவறாது.கவனம் சிதறாது.அவர்களுக்கு எந்த உதாரணமும், ரோல் மாடலும் தேவைப் படாது.அப்படி தான் , பவிக்கும் எதுவும் தேவை இல்லை.அவள் நிச்சயம் பொறுப்பான,ஊர் மெச்சும் பிள்ளையாக வருவாள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.நான் அவள் பக்கம் இல்லை என்றால் கூட,நிச்சயம் வருவாள்.


பவிக்கு என் ஆலோசனை எல்லாம் "பாதை உன்னுடயைது.தேர்வு செய்யும் உரிமை உன்னுடையது. உனக்கு முன்பே அந்தப்  பாதையை கடந்தவள் என்ற முறையில், கற்கலும் முட்களும் இருந்தால், பாத்து நட என்று உன் கை பிடிக்கும் கடமை மட்டுமே என்னுடையது ".

பெற்றோர்களே திருந்துங்கள. பிள்ளைகளை எவருடனும் ஒப்பிடாதீர்கள்.அவர்களை ஊக்கப் படுத்துவதாக இருந்தாலும் சரி தாழ்வு படுத்துவதாக இருந்தாலும் சரி, ஒப்பிட வேண்டாம்.அது ஒரு போதும் அவர்கள் முன்னேற்றத்திற்கு உதவாது.வழிகாட்டல் வேறு , ஒப்பீடல் வேறு.முடிந்தால் நீங்கள் சிறந்த வழிகாட்டியாய் இருங்கள், இல்லை சிறந்த வழிகாட்டியை உருவாக்கித் தாருங்கள். கல்வி விடயத்தில் பிள்ளைகளை அவர்கள் வழியில் விடுங்கள்.வாழ்க்கை அனைத்தையும் கற்றுத் தரும் வாழவும் கற்றுத் தரும்.

Thursday, May 23, 2013

ஏதொ தெரியாத் தனமாக் கிறுக்கிட்டேன்..வந்துக் கொஞ்சம் படிங்களேன் ப்ளீஸ்..




ஓர்  மாலை மஞ்சள் நேரத்திலே 
மாமரத் தோப்பினிலே 
மாங்குயில் இசைக்கையிலே 
மாமனவன்  அருகினிலே 
மங்கை இவள் நாணத்திலே 
மயங்கி நின்றால் மனதினிலே 

மண்ணைப் பார்த்து நின்றவளை 
மனக் கண்ணில் எடைப் போட்டவன் 
அவள் மல்லிகைப் பூ வாசத்திடம் 
மனமே நீ சிக்கிடாதே என மனதுக்குள் 
நொந்துக் கொண்டான் மெல்ல உள்ளே 
சிரித்துக் கொண்டான்..

தடைப் போட்ட வெட்கத்தை 
தள்ளிக் கொஞ்சம் வைத்தவள் 
தன் மன்னவன் முகம் பார்க்க 
மைவிழி ஏரெடுத்து  அவன் 
மௌனம் .களைய முறையிட்டாள்..

மௌனம் கலைந்த மன்னவன் 
முல்லை பூ சிரிப்புடன் முதலில் 
முனைந்தான் கேள்வி ஒன்றை..

என்ன இன்று  பகலில் நிலவு?
என்னருகிலேயே!! அதுவும் 
இவ்வளவு நெருக்கத்தில்..!!

சின்னதொரு புன்னகையில் 
சிட்டாய் அவள் பதில் சொன்னாள்.
ஒளி கொடுத்தச் சூரியனுக்கு ஒரு 
தினமேனும் நன்றி சொல்ல 
இந்தத்  திங்கள் இன்று  பகலில் 
வந்தேன்..

உன்  இதழால்  சொல்லும் வார்த்தை விட 
எழுதும் வார்த்தை எத்தனை அழகென்று 
நீ அறிவாயா?

ஒரு முறை எழுதிவிட்டுச் செல்..
மறு முறை இந்த நிலவு  தரிசனம் 
தரும் வரையில் நித்தம் படித்து 
நெஞ்சுக்குள் பூத்திருப்பேன்..

அச்சம் வந்து அவளைக் கொல்ல 
அப்படியே நின்றிருந்தாள்..
அவள் வார்த்தை எழுதக்  காத்திருந்தவன் 
அருகில் வந்துக்  கைபிடித்தான்..

வேங்கை அவன் கைப் பட்டதும் 
மங்கை அவள் சிவந்துப்  போக 
அவள் சிவப்பழகை பார்த்திட்ட 
மஞ்சள் வெயில் மேகம் கொஞ்சம் 
கோபம் கொண்டுக்  கருத்துப் போக 
கார்மேகம் வந்துச் சூழ்ந்துக் கொள்ள 
கண்சிமிட்டும் நேரத்தில் மழை வந்து 
கலைத்திட்டது அவன் பெற 
இருந்த வார்த்தையை....